கொரோனா பரவினால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும்! ‘மொட்டு’ எச்சரிக்கை.
“நாட்டில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போராட்டங்களால் கொரோனாத் தொற்று உச்சமடைந்தால் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும். மீண்டுமொரு நாடு தழுவிய முடக்கம் பொருளாதாரத்துக்கு மாத்திரமல்ல நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எச்சரிக்கை விடுத்தார்.
பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாட்டை 2019ஆம் ஆண்டு ஒப்படைத்ததைப் போன்று எதிர்த்தரப்பினர் தற்போது அரசுக்கு எதிராகக் கருத்துரைக்கின்றார்கள்.
துரதிஷ்டவசமான கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த இரண்டு வருட காலமாக தாக்கம் செலுத்துகின்றது. அதன் காரணமாக ஏற்றுமதி பொருளாதாரமும், சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் முன்னேற்றமடைந்த நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று வரை அதன் தாக்கத்தை எதிர்கொள்கின்றன.இருப்பினும் இலங்கை கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதில் செல்வந்த நாடுகளைக் காட்டிலும் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர். தற்போது முன்னிலை சேவை தரப்பினருக்கு மூன்றாம் கட்டமாக செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுவருட கொரோனாக் கொத்தணி தீவிரமடைவதற்குத் தொழிற்சங்கத்தினரது போராட்டமே காரணமாகக் காணப்பட்டது.
புதுவருட கொரோனா கொத்தணியில்தான் அதிக மரணங்கள் பதிவாகின. அதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது. கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தற்போது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
தற்போது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போராட்டங்களால் கொரோனாத் தொற்று உச்சமடைந்தால் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும். அவ்வாறு இடம்பெற்றால் நாடு மாத்திமல்ல பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, தொழிற்சங்கத்தினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்” – என்றார்.