இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு டி.20 உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியல் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 85 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் பும்ராஹ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து வெறும் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் இருந்தே வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த போட்டியில் வெற்றியை விட ரன் ரேட்டே மிக முக்கியம் என்பதால் ஸ்காட்லாந்தின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் இந்திய அணியை வெற்றியை நோக்கி ஈசியாக அழைத்து சென்றனர்.
ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களும், கே.எல் ராகுல் 19 பந்துகளில் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 6.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் ரன் ரேட்டும் உயர்ந்துள்ளது.