‘பட்ஜட்’டில் நான் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் எதுவுமே செய்ய முடியாது!

“நாவலர் குருபூஜை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் மண்டபத்தைப் புனரமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. ஆனால், எதிர்வரும் யாழ். மாநகர சபை வரவு – செலவுத்திட்டத்தில் நான் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது.”
இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நல்லை குமரன் மலர் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆரியகுளம் தொடர்பில் வரலாற்றாசிரியர்கள் எவரும் உரிமை கோரவில்லை என்ற கவலை எனக்குள்ளது. அந்தக் கவலை இன்று நீங்கியுள்ளது. ஆரியகுளம் தொடர்பாக குரல் கொடுக்குமாறு நான் பல வரலாற்றாசிரியர்களிடம் கூறியிருந்தேன். நான் ஒரு செவ்வியிலே ஆரியகுள வரலாறு பற்றி தெரிவித்திருந்தேன். நான் சொன்ன பின்னரே ஆரியகுளம் தொடர்பாக சர்ச்சைகள் உருவாகி இருந்தன.
இந்தச் சவால்களில் இருந்து என்னைப் பாதுகாக்க வேண்டியதும் என்னுடைய போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டியதும் சமூகப் பெரியார்களதும் சமூகத்தினதும் கடமையாகும்.
ஆரியகுளம் என்பது சிங்களவர் உடையது அல்ல. இது ஆரியச் சக்கரவர்த்திகளினுடைய குளம் என்று நான் கூறியிருந்தேன். அதன் பின்னர் அவர்கள் உரிமை கோரி கடிதம் அனுப்புகின்றனர.
நாங்கள் எங்கள் மரபுரிமைகள் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பயணங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்போது சில இடங்களில் இடையூறுகளை நாங்கள் சந்திக்கலாம். அதற்காக எங்களுடைய மக்கள் மத்தியில் இருந்து எமக்கு பெரும் ஆதரவு எமக்கு தேவைப்படுகின்றது.
தனி ஒரு அரசியல்வாதியாக ஒரு பொறுப்பைத் தந்து விட்டு பொதுமக்கள் ஒதுங்கி நிற்க முடியாது. இதை நான் அன்போடும் உரிமையோடும் உங்களிடம் கேட்கின்றேன். எங்கள் செயற்பாடுகளுக்கு நீங்கள் பக்கத்துணையாக பயணிக்க வேண்டும்.
நாவலர் மண்டபம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றேன். யாழ். மாநகர சபை இந்த மண்டபத்தை சரியாக பராமரிக்கத் தவறியுள்ளது என்பதில் உண்மை இருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
நாவலர் மண்டபத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்பதற்காகத் தனியான முகாமைத்துவ குழு ஒன்றை நாங்கள் சமூகப் பெரியார்களையும் உள்ளடக்கிச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றேன். நாவலர் தமிழருடைய மரபுரிமைச் சொத்து.
எதிர்வரும் நாவலர் குருபூசை தினத்திலே நாவலரின் சிலையை நாவலர் மண்டபத்தில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதுன.
அதேபோன்று நாவலர் மண்டபத்தை புனரமைப்பதற்கான செலவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒரு கொடை வள்ளல் இதைப் புனரமைத்துத் தருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார். இதனைப் புனரமைப்புச் செய்ய சபையின் அனுமதி கிடைத்திருக்கின்றது.
அத்தோடு இந்த விடயங்களோடு நின்றுவிடாமல் தொடர்ந்து இதனைச் சரியாகப் பேணிப் பாதுகாப்பதற்கு முகாமைத்துவக் குழு ஒன்றை என்னுடைய காலத்திலேயே நியமிப்பதற்கு விரும்புகின்றேன்.
எதிர்வரும் யாழ். மாநகர சபை வரவு – செலவுத்திட்டத்தில் நான் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது. அதிலிருந்து நான் தப்பிப் பிழைத்தால் வருகின்ற பெப்ரவரி மாதம் வரை நான் இருந்து நாவலர் மண்டபத்தை சிறப்பாகப் பராமரிப்பேன் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” – என்றார்.