கொரோனா ஐசியு வார்டில் பயங்கர தீ விபத்து! மகாராஷ்டிராவில் 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐசியு வார்டே இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இந்த வார்டில் மொத்தம் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்களை தவிர்த்து மற்றவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும், மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்காகவே அவர்களுக்கு புதிய கட்டிடத்தில் வார்டு அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டிருப்பதை முக்கிய பிரச்னையாக கருதுகிறோம். மாநிலத்தில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிபத்து பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.