குழந்தைகள் பட்டாசு வெடித்ததால் ஆத்திரத்தில் ஆசிட் வீச்சில் ஈடுபட்ட நபர்.. இரு பெண்களுக்கு தீக்காயம்..
குழந்தைகள் பட்டாசு வெடிக்கக்கூடாது என கண்டித்தும் அவர்கள் கேட்காமல் பட்டாசு வெடித்ததால் ஆத்திராமடைந்த நபர், அங்கிருந்தவர்கள் மீது மீது ஆசிட் வீசியதில் இரண்டு பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கின்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை இளசுகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கின்றனர். பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பெண்கள் மீது ஆசிட் வீச்சு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தில் கைலாஷ்பூரி எனும் பகுதியில் தான் அந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
கைலாஷ்பூரியில் தீபாவளியன்று குழந்தைகள் வழக்கம் போல உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடிக் கொண்டிருந்த போது, அங்கு தள்ளுவண்டியில் பழங்கள் வியாபாராம் செய்து வந்த நபர் ஒருவர் குழந்தைகள் வெடிக்கும் பட்டாசு சத்தத்தால் தொந்தரவு அடைந்துள்ளார். இதனால் பட்டாசு வெடிக்கக் கூடாது என அவர் குழந்தைகளை கண்டித்திருக்கிறார். ஆனால் அவரின் சொல்லை மீறியும் குழந்தைகள் பட்டாசு வெடிப்பதில் மும்முரமாக இருந்ததால் அங்கிருந்த சிறுவனை கன்னத்தில் பளாரென அறைந்திருக்கிறார் அந்த நபர்.
பட்டாசு வெடித்த சிறுவனை அறைந்ததால் இதனை தட்டிக்கேட்டு இருதரப்புக்குள் பிரச்னை வெடித்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அந்த தள்ளுவண்டி கடைக்காரர் தனது வீட்டுக்குள் சென்று ஆசிட் பாட்டிலை கொண்டு வந்து தன்னுடன் வாக்குவாதம் செய்தவர்கள் மீது வீசினார். இதில் அவரின் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது ஆசிட் பட்டதில் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் அங்கிருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக ஆசிட் படாமல் தப்பித்துள்ளனர். அதே நேரத்தில் ஆசிட் வீசிய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிட்வீச்சால் காயம் அடைந்த 70 மற்றும் 18 வயதுடைய இரண்டு பெண்களையும் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு பெண்களும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஆசிட் வீசிய நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் கூறினர்.