22 மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைப்பு! முடிவெடுக்காத தமிழக அரசு
நாடு முழுவதும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரி வரியை குறைப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை ரூபாய் 5-ம் டீசல் மீதான கலால் வரியை ரூ. 10-ம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியிலிருந்து விலை குறைப்பு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து உடனடியாக பாஜக ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க தொடங்கின. தற்போது வரையில் மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன. பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட் வரியை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒடிசாவில் நேற்று நள்ளிரவு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியில் ரூ. 3 குறைப்பு செய்யப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அளித்துள்ள பேட்டியில், ”வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதில் எந்த லாஜிக்கும் இல்லை. மாநிலங்களைவிட மத்திய அரசுக்குதான் பெட்ரோல் டீசலில் அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியில் குறைப்பு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது” என்றார்.
மற்றொரு முக்கிய எதிர்கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ”மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியில் குறைப்பு செய்ய முடியும்” என்று கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கலின்போது பெட்ரோல் மீதான வரியை ரூ. 3 குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாட்டில் மற்ற மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்து வரும் நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவு ஏதும் எடுக்கவில்லை.