தலைமறைவாக இருந்த திமுக பிரமுகர் பில்லா ஜெகன் கைது!
மது குடித்ததை தட்டிக்கேட்ட சுற்றுலா மாளிகை காவலரை தாக்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஒரு நபர் விசாரணை ஆணையம் செயல்பட்டு வரும் அரசினர் சுற்றுலா மாளிகையில் மது அருந்திய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகனை கண்டித்த சுற்றுலா மாளிகை காவலா் சதாம்சேட் மீது பில்லா ஜெகன் தனது ஆதரவாளர்களுடன் தாக்கியதையடுத்து சதாம் சேட் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை செய்த தெற்கு காவல் நிலைய போலீசார் தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன் உள்ளிட்ட 6 போ் மீது நேற்று கொலை முயற்சி உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நிலையில், பில்லா ஜெகன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.
இந்நிலையில், தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று பில்லா ஜெகனை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
யார் இந்த பில்லா ஜெகன்?
தூத்துக்குடியைச் சேர்ந்த பில்லா ஜெகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், நடிகர் விஜய் ரசிகர் மற்றத்தின் மாவட்டத் தலைவராகவும் இருந்து வருகிறார். தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் பெற்று வலம்வந்துள்ளார்.
நடந்தது என்ன?
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையானது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்குள் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் சென்ற பில்லா ஜெகன், மது அருந்திய நிலையில், இந்த வளாகத்தில் மதுகுடிக்க அனுமதி இல்லை என சுற்றுலா மாளிகை ஊழியரான சதாம்சேட் கூறியிருக்கிறார். இதனையடுத்து பில்லா ஜெகன் உட்பட அங்கிருந்தவர்கள் திடீரென சதாம்சேட் மீது தாக்குதல் நடத்தியதுடன், சுட்டுக்கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றிருக்கின்றனர்.
திமுகவில் இருந்து நீக்கம்:
இதனிடையே திமுக தலைமை பில்லா ஜெகனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் இருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது