இறந்த நபருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ்.. தொடரும் குளறுபடி
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் ஆங்காங்கே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இறந்த நபருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயா என்ற 66வயது பெண் ஏப்ரல் 17ம் தேதி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். சில மாதங்கள் கழித்து அக்டோபர் 28ம் தேதி அவரது செல்போன் எண்ணுக்கு AD- NHPSMS என்ற எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவருக்கு 28ம் தேதி இரண்டாவது தேதி தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் இருந்துள்ளது. அதன் மூலம் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மே 22ம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். முதல் டோஸ் மட்டுமே செலுத்தியிருந்த விஜயாவுக்கு இறந்த பிறகு இரண்டாவது டோஸ் செலுத்தியதற்கான சான்றிதழ் கிடைத்துள்ளது. அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 25வயதான முத்துக்குமரன் என்ற நபருக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் கிடைத்தது குறித்து நியூஸ்18 விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.
முத்துக்குமரன் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பியிருந்தார். இவர் மட்டுமல்லாமல் சென்னையில் பணிபுரியும் தஞ்சாவூரை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், தருமபுரியை சேர்ந்த 30 வயது நபருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமலே செலுத்தியதாக சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்த நபர்கள் இரண்டாவது டோஸ் எப்படி செலுத்திக் கொள்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
தமிழகத்தில் இது வரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உரிய நேரத்தில் இரண்டாவது தவணை செலுத்தாமல் உள்ளனர்.