தென் ஆப்பிரிக்க அரையிறுதி கனவை தகர்த்த இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ரஸ்ஸி வென்டெர் டூசென், ஐடன் மார்க்ரம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வென்டர் டுசென் 94 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 52 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 131 ரன்னில் இங்கிலாந்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.
இதில் ஜேசன் ரான் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 26 ரன்னில் பட்லரும், 37 ரன்னில் மொயின் அலியும், ஒரு ரன்னில் பேர்ஸ்டோவும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த டேவிட் மாலன் – லியாம் லிவிங்ஸ்டோன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதிக் கனவு கலைந்தது.
அதன்பின் டேவிட் மாலன் 33 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதில் 20ஆவது ஓவரை வீசிய காகிசோ ரபாடா ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் 1-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.