மாவட்ட ஊடக இல்லம் அரசாங்க அதிபரினால் திறந்துவைப்பு.
திருகோணமலை மாவட்ட ஊடக இல்லம் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளவினால் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மத்திய பஸ் தரிப்பிடத்தில் இந்த ஊடக இல்லம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு என்பன இவ்வில்லத்தை நிர்வகிக்க உள்ளன.
மக்களை தெளிவூட்டக்கூடிய முக்கிய ஊடக சந்திப்புக்களை இந்த நிலையத்தில் மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஊடகங்கள் ஒரு நாட்டைப் பொறுத்தவரை முக்கியமான பலம்வாய்ந்த துறையாக காணப்படுகின்றது. ஊடகங்கள் சரியான தகவல்களை மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் வழங்கல் வேண்டும். அத்துடன் ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படுவதோடு ஒரு தலை பட்சமாக செயற்படுவதை விடுத்து சம்பந்தப்பட்ட தரப்பினருடம் காரண காரியங்களை வினவி அந்த செய்திகளை வெளியிடுவது காலத்தின் தேவையாக அமைவதாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும். பொருத்தமான அணுகு முறைகளை கையாள்வதன் மூலமாக மக்களுடைய பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுகளை பெற்றுக் கொள்ள கூடியதாக அமையும் என்றும் இதன் போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் முன்னணியின் முக்கியஸ்தர்கள்,மொரவெவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பொல்ஹேன்கொட ரத்ன தேரர்,ஊடகவியலாளர்கள் மற்றும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.