வேகமாக நிரம்பும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக புழல் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்துவிடப்படுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 20 செண்டி மீட்டர் அளவை தாண்டி மழைபெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் இருப்பு அதிகரிப்பு காரணமாக புழல் ஏரியில் இருந்து இரண்டு மதகுகள் வழியகா தலா 250கன அடி வீதம் 500 கன அடி நீர் இன்று காலை 11 மணிக்கு திறந்துவிடப்பட்டது.
தற்போது புழல் ஏரி அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கூடுதலாக நீரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதலாக 250 கன அடி சேர்த்து தற்போது 750 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 250 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புழல் ஏரி திறக்கப்பட்டதை அடுத்து, நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்தூர்,கொசப்பூர், மணலி, மற்றும் சடையான்குப்பம், ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 500 கன அடிநீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படுவதால் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு , திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின்இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.