மாற்று வழியை நாடுவோம்! – அரசுக்கு திஸ்ஸ எச்சரிக்கை.
“மக்களுக்கான பயணத்தை அரசு மேற்கொள்ளாவிட்டால் பங்காளிக் கட்சிகளுக்கு மாற்று வழியை நாட வேண்டிவரும்.”
இவ்வாறு அரச தலைமைக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண.
“தேர்தலுக்கு முன்னர் பங்காளிக் கட்சிகளுக்கு இந்த அரசு பல உறுதிமொழிகளை வழங்கியது. அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. எனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. இன்னும் சாதாரண எம்.பியாகவே இருக்கின்றேன். எனவே, மக்களுக்கு நன்மை பயக்காவிட்டால், அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் மாற்று வழியை நாடுவோம்” என்றும் திஸ்ஸ விதாரண ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரமற்ற கைப்பாவை என்றும், சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான மோசமான அமைச்சரவையே தற்போது உள்ளது என்றும் இலங்கை கம்யூனிஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் டியூ குணசேகர அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் அரசை எச்சரித்துள்ளனர்.