கரையொதுங்கிய ஆணின் சடலம் தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவருடையது
பிந்திய இணைப்பு :
குறித்த சடலம் குறித்து விசாரித்தபோது சடலமாக கரையொதுங்கியவர் தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் என்று தெரியவந்துள்ளது.
குறித்த மீனவர் அண்மையில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தவறி கடலில் வீழ்ந்து காணாமல் போயிருந்தவர் என்று அங்கிருந்து செய்தியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சடலத்தை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், காரைநகர், கோவளம் கடற்பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இன்று மதியம் கடலுக்குச் சென்றவர்கள் சடலத்தை அவதானித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.
குறித்த நபர் உயிரிழந்து ஒரு வாரத்துக்கு மேல் இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
அண்மையில் இந்தப் பகுதிகளில் யாரும் காணாமல்போனதாக பொலிஸ் பதிவுகள் இல்லாததால், இந்தியாவைச் சேர்ந்தவர்களின் சடலமாக இருக்கலாமா என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவின் நாகை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முன்னர் பழனி என்ற ஒரு மீனவர் காணாமல்போயிருந்தார். அவ்வாறு காணாமல்போயிருந்த மீனவரின் உடலமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக உயிரிழந்தவரை அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இதேநேரம், இவ்வாறு மீட்கப்பட்ட உடலம் அடையாளம் காணப்பட்டாலும் உடலம் மிகவும் சிதைவடைந்து காணப்படுவதால் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இங்கேயே அடக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.