புற்று நோய் சிகிச்சை இயந்திரம் பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு நன்கொடை….
புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி (HIPEC) இயந்திரம் ஒன்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று (நவம்பர்,08) இடம்பெற்ற நிகழ்வின் போது பாதுகாப்புச் செயலாளரும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபையின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் இணைந்து ரூபா 17 மில்லியன் பெறுமதியான இந்த இயந்திரத்தை கையேற்றனர்.
பல்வேறு வயிற்றுப் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தை ‘தி ஹெல்ப் சர்க்கிள்ஸ்’ அரசசார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் நன்கொடையாக வழங்கினர்.
‘தி ஹெல்ப் சர்க்கிள்ஸ்’ அரசசார்பற்ற நிறுவனம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், பரந்தளவிலான மனிதாபிமான உதவி தேவைப்படும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்களுக்கு நற்பண்பு மற்றும் நன்மை பயக்கும் சேவைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் இலாப நோக்கற்ற சமூக சேவை நிறுவனமாகும் எனக் குறிப்பிட்டதுடன் அவர்கள், சமூகம், சாதி, மதம், நிறம், பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரினதும் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பாராட்டத்தக்க சேவையை முன்னெடுத்து வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.
‘தி ஹெல்ப் சர்க்கிள்ஸ்’ அமைப்பானது நாட்டில் உள்ள சிரேஷ்ட கலைஞர்களில் ஒருவரும் இசையமைப்பாளருமான கீர்த்தி பாஸ்குவேல் மற்றும் நிரங்கா நாணயக்கார ஆகியோரின் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது,
இந்த இயந்திரத்தை நன்கொடையாக வழங்குவதற்கான இலக்கை அடைய ‘தி ஹெல்ப் சர்க்கிள்ஸ்’ நிறுவனத்திற்கு பெரும் உதவியாக 12.7 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த லங்காஜித் பன்வில மற்றும் பிரசாந்தி நுகலியத்த ஆகியோரையும் பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார்.
“நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான தனிநபர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாக அமையும் என்பது எனது உறுதியான நம்பிக்கை”, என்று ஜெனரல் குணரத்ன கூறினார்.
இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வானது முழு நாட்டிற்கும் ஒரு மகத்தான பெறுமதியான ஒரு உன்னதமான மற்றும் தாராளமான சைகையாக சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
ஜெனரல் குணரத்ன தொடர்ந்து கூறுகையில், “இன்று முதல், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் மேலும் ஒரு மதிப்புமிக்க இந்த சேர்க்கை மூலம் நாட்டில் உள்ள நோயாளிகள் பயனடைவார்கள்” எனவும் மேலும் “இதுகொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு திறமையான சுகாதார நிபுணர்களை உருவாக்க உதவும் எனவும் டகுறிப்பிட்டார்.
“அதிநவீன உள்கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு போதனா வைத்தியசாலையாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை சுகாதாரத் துறையில் சிறந்து விளங்கும் ” என்றும் அவர் மேலும் கூறினார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் 2018ம் ஆண்டு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 4800 நோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்துள்ளதுடன் 2000 க்கும் மேற்பட்ட பெரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று இது நாட்டின் முக்கியமான புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ஜெயன் மெண்டிஸ், புற்றுநோயியல் துறைத் தலைவர் விஷேட வைத்தியர் ஜெயந்த பலவர்தன, வைத்தியசாலையின் பணிப்பாளர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள்,வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், ‘தி ஹெல்ப் சர்க்கிள்ஸ்’ நிறுவன உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.