அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வளர்ந்து இலங்கையில் வடக்கு நோக்கி நகரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தெற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதுடன் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட தாக்கத்தினால் நாட்டில் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களிலும். மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் இன்று மாலையிலிருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.மேலும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.