சர்வதேச பயணம்: இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்கலாம்? என்னென்ன விதிகள்?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு போடப்பட்டதைத் தொடர்ந்து, பல நாடுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விமான சேவைகளை இயக்கத் தொடங்கியிருந்தாலும், தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் இந்தியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாதவாறு இருந்தது. கொரோனா ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சீராக இயங்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்களும், Air Bubble Pact என்ற அடிப்படையில், பல நாடுகளுக்கும் பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. எந்த நாடுகளுக்கு இந்தியர்கள் விமானப் பயணம் மேற்கொள்ளலாம் என்பது பற்றிய முழு விவரங்கள் இங்கே.
Air Bubble Pact என்பது இந்தியா மற்ற நாடுகளோடு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறிய அறிக்கையின் படி, Air Bubble Pact அல்லது டிரான்ஸ்போர்ட் பபில்ஸ் என்பது ஒரு இரண்டு நாடுகளிடையே பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒரு தற்காலிக ஒப்பந்தம் என்று அறியப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது. இன்னும் வழக்கமான அட்டவணைப்படி பயணிகள் விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பதால், இந்த வழிமுறையை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
MoCA தயாரித்துள்ள பட்டியலின் படி, பின்வரும் நாடுகளுக்கு இந்தியர்கள் பயணிக்கலாம் மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு வரலாம். ஆனால், இதற்கென்று சில விதிகளும் கூறப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளுக்கு யார் தகுதி பெறுகிறார்களோ, அவர்கள் மட்டும் தான் இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நாட்டுக்கு செல்ல முடியும் அல்லது அங்கிருந்து இந்தியாவுக்கு வர முடியும்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் வேறு நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள், எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறாரோ அந்த நாட்டுக்கு பயணிக்கலாம். உதாரணமாக, ஆஃப்கானிஸ்தான்
பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர், இந்தியாவில் இருந்து ஆஃப்கானிஸ்தானுக்கு மட்டுமே பயணிக்க முடியும்.
நீங்கள் பட்டியலில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நாட்டிற்கான விசா வைத்திருந்தால், அந்த நாட்டுக்கு மட்டுமே செல்ல முடியும்.
வேறு நாட்டின் குடிமகன், அந்த நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் இந்தியாவில் செல்லுபடியாகும் விசா வைத்திருந்தால், அங்கிருந்து இந்தியாவுக்கு வரலாம். உதாரணமாக, பங்களாதேஷை சேர்ந்த நபர் பங்களாதேஷ் பாஸ்போர்ட் மற்றும் இந்திய விசா வைத்திருந்தாள், அவர் பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.
சர்வதேச விமானப் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கும் நாடுகளின் பட்டியல்:
ஆஃகானிஸ்தான், பஹ்ரைன், பங்களாதேஷ், பூட்டான், கனடா, எத்தியோப்பியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, குவைத், மாலைதீவுகள். நேபால், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், கத்தார், ரஷ்யா, செஷல்ஸ் தீவுகள், ஸ்ரீலங்கா, எமிரேட் (UAE), யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானப் பயணம் மேற்கொள்ளலாம் மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரலாம். இந்தியா மற்றும் குறிப்பிட்ட நாட்டுக்கிடையே தான் விமானப் பயணத்துக்கான டிக்கெட்டுகள் வழங்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.