தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? ஆரஞ்சு அலர்ட்?
சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்னும் இரு தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் சென்னையில் வசிக்கும் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்தநிலையில் இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்பட காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று இந்த மாவட்டங்களில் அதீதிவிர மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தீவிரமான மழை இருக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் கூடுதலாக மழை பெய்தால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிரமான மழை இருக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுபோல காரைக்காலில் 20 செ.மீ மழையும், நாகப்பட்டினத்தில் 15 செ.மீ மழையும் பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.