முடக்கத்தைத் தவிர வேறு மாற்று வழி இல்லை! – சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை.
“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடையாமல் தடுப்பதாயின் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதே அத்தியாவசியமானதாகும். அவ்வாறில்லையெனில் நாட்டை முடக்குமாறு பரிந்துரைப்பதைத் தவிர சுகாதாரத் தரப்பினருக்கு வேறு மாற்று வழி கிடையாது.”
இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்குச் சுகாதாரத் தரப்பினரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதுள்ள நிலைமையை மிகவும் அபாயம் மிக்கதாகவே கருத வேண்டும். தற்போதுள்ள நிலைவரத்தின் உண்மை நிலையை அடுத்து வரும் வாரங்களிலேயே தெளிவாகக் காண முடியும்.
இதன்போது ஏற்படும் அபாயத்திலிருந்து மீண்டு மீண்டும் சுமுகமான நிலைமைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்படக்கூடும்.
எனவே, கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்குக் காணப்படும் ஒரேயொரு வழி சுகாதார விதிமுறைகளை முறையாகப் பேணுவது மாத்திரமேயாகும்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கையில் படிப்படியான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதோடு, நாளாந்தம் இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை சுமார் 500 ஆகவே காணப்பட்டது.
எவ்வாறிருப்பினும் அதன் பின்னர் ஏற்பட்ட சிறு அதிகரிப்பும் சிறந்த அறிகுறியல்ல என்பதை நாம் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தோம்.
அதற்கமையவே தற்போது நாளாந்தம் சுமார் 600 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இது தொடர்பில் சகல தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறில்லையெனில் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் பழைய நிலைமையை அடைவது மிகக் கடினமாகும். அவ்வாறானதொரு அபாய நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை முடக்குமாறு பரிந்துரைப்பதைத் தவிர எமக்கு வேறு மாற்று வழி கிடையாது” – என்றார்.