கிராம சேவகர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான மூன்று நாட்களைக் கொண்டதான முழுநாட் பயிற்சி நிகழ்சித்திட்டம் இன்று(10) காலை 09.00மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த பயிற்சிநெறியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மாவட்ட செயலக பயிற்சி பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் இப் பயிற்சியினூடாக கிராம மட்டத்தில் பிரதான உத்தியோகத்தர்களான கிராம சேவகர்களின் அறிவு, திறன், நடத்தை ஆகியவற்றை வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டமாக இது அமையப்பெற்றுள்ளது.
இதற்காக முதற்கட்டமாக ஆறு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் அறுவது கிராம சேவகர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு கட்டம் கட்டமாக இடம்பெறவுள்ளது.
இன்றைய முதல் நாள் செயலமர்வில் உற்பத்தித் திறன் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக மாவட்ட செயலக பிரதம உள்ளகக்கணக்காய்வாளர் மற்றும் உற்பத்தித்திறன் பிரிவின் பிரதம இணைப்பாளர் கே.லிங்கேஸ்வரன் அவர்களும் தலைமைத்துவம் தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொள்வர்.
நாளை(11) வியாழக்கிழமை கிராம அலுவலர்களுக்கான கடமைகளும் பொறுப்புக்களும் தொடர்பாக ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் என்.கமலநாதன் அவர்கள் வளவாளராக கலந்துகொள்ளவுள்ளார்.
நாளை மறுதினம்(12) வெள்ளிக்கிழமை சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலைய பிரதம ஆய்வாளர் எம்.வி.பி.சி ஹேரத் அவர்கள் வளவாளராக கலந்துகொள்ளவுள்ளார்.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட செயலக பிரதம உள்ளகக்கணக்காய்வாளர் மற்றும் உற்பத்தித்திறன் பிரிவின் பிரதம இணைப்பாளர் கே.லிங்கேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.சு.விக்கினேஸ்வரன், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன், பயிற்சிப் பிரிவின் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.