ஆசிரியர்கள்,அதிபர்கள் ஆர்ப்பாட்டம்.
அமைச்சரவைக் குழுவினால் முன் மொழியப்பட்ட சம்பள அதிகரிப்புத் தொகையினை ஒரே தடவையில் முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று மாலை மேற்கொண்டது
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம். மூஸா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை கல்வி வலய அதிபர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அங்கு உரையாற்றிய இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா
கடந்த 24 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வரும் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க அரசுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தொடர்ந்தும் ஆசிரியர்களைப் போராட்க்காரர்களாக மாற்றும் செயற்பாடுகளில் அரச தரப்பு செயற்பட்டால் போராட்ட வடிவங்களை நாம் மாற்றியமைப்போம்.
கொரோனா விடுமுறையின் பின்னர் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு வந்துள்ளனர். அவர்களது கல்வி முன்னேற்றத்திற்குரிய சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். அவர்களது கல்விக்குப் பாதிப்பாக அமையும் எந்தப் போராட்டங்களுக்கும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் துணை நிற்காது. கூட்டிணைந்த தொழிற்சங்க நடவடிக்கைகளும் மாணவர் நலனை மையப்படுத்தியே முன்னெடுக்கப்படுகின்றன என்பதனை பெற்றோர்கள் உள்ளிட்ட தரப்பினர் உணர்ந்துள்ளனர்.
நாட்டின் அசாதாரண சுகாதாரச் சூழ்நிலையினால் கடந்த இரண்டு வருடங்களாக ஒழுங்கான பாடசாலை நடவடிக்கைகள் இல்லை. இணைய வழிக் கற்பித்தலை இடை நிறுத்திய போராட்டம் சொற்பகாலமே. ஆயினும் மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அதிகரிக்கப்படுமளவுக்கு இக் காலப் பகுதிக்கான பெறுபேறுகளில் சித்திவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சொந்த செலவில் ஆசிரியர்கள் இணைய வழிக் கற்பித்தலில் ஈடுபட்டமையே ஆகும். இக்காலப்பகுதியில் சம்பள அதிகரிப்பு செய்யமுடியாது என சில கூலிகள் கதையளக்கின்றனர். ஆனாலும் ஏனைய மாபிய வேலைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு வரவில்லையாயின் நமது போராட்டங்கள் வேறு வடிவமெடுக்கும் என சம்பந்தப்பட்ட தரப்பினை எச்சரிக்கின்றோம் என்றார்.