சிக்கியது சென்னை- திசை திரும்பிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக, பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் உள்ளிட்ட ஏரிகளில், நீர்மட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஏரிகளில் இருந்து நீர் திறப்பும் நிலைமக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மாலை, கடலூர் அருகே காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை திரும்பி உள்ளதாகவும், இதன் காரணமாக, மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே, சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.