வெள்ளத்தில் சிக்குண்டு நால்வர் மரணம்; மூவர் மாயம்! தொடர்கின்றது தேடுதல் நடவடிக்கை.
வெள்ளத்தில் சிக்குண்டு நால்வர் மரணம்; மூவர் மாயம்!தொடர்கின்றது தேடுதல் நடவடிக்கை
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக உடப்பு, வரக்காபொல, முந்தல் மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவர் உட்பட மூவர் காணாமல்போயுள்ளதுடன் நால்வர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குருநாகல் பரணகம வில்பொல பிரதேசத்தில் நபர் ஒருவரும், அவரது 11 வயது மகனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், தந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சடலத்தைத் தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குருநாகல் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
நேற்று மாலை மேலதிக வகுப்புக்காகச் சென்றுவிட்டு தனது தந்தையுடன் வீடு திரும்பும்போதே பரணகம ஓயா பெருக்கெடுத்ததில் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தனது கணவரும் மகனும் வீடு திரும்பவில்லை என்று சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி குளியாப்பிட்டிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாரவில்லுவ, கிரிஉல்லவத்த ஆகிய இரு பிரதேசங்களில் இருவர் நேற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நபரைத் தேடும் பணி இடம்பெறுகின்றது.
முந்தல் தாரவில்லுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முந்தல் பிரதேசத்தை சேர்ந்த 70 வயது நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
காணாமல்போனவரைத் தேடும் பணியில் முந்தல் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, முந்தல் – கிரிவுல்லவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது வீதியில் பயணித்த நபர் ஒருவர் வெள்ளநீர் நிரம்பியிருந்த குழிக்குள் விழுந்து மரணமடைந்துள்ளார். முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவரின் சடலம் முந்தல் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம், உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களஎலிய பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மங்களஎலிய களப்பில் இருந்த நபரை அழைத்து வருவதற்காகச் சென்ற நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளார். கொத்தன்தீவு பிரதேசத்தை சேர்ந்த 59 வயது நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த நபரை மீட்கும் பணியில் உடப்பு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கேகாலை, வரக்காபொல பொலிஸ் பிரிவு வெனிவெல்கட்டுவ பிரதேசத்தில் அதிக மழை காரணமாக வெள்ள நீர் நிரம்பியிருந்த பகுதியில் குளிர்ப்பதற்காக நண்பர்களுடன் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். வெனிவெல்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 இளைஞரே வெள்ளநீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.