ஒரே நாடு – ஒரே சட்டம் என சட்டமூலங்களை உருவாக்க ஞானசார தேரருக்கு வழங்கிய அதிகாரம் ரத்து!
ஒரே நாடு – ஒரே சட்டம் சட்டமூலத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை ஜனாதிபதியே இரத்துச் செய்துள்ளார்.
ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த செயலணியை நிறுவுவது தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், “ஒரே நாடு – ஒரே சட்டம் மற்றும் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை ஆய்வு செய்து சட்டமாக்குவது இந்த செயலணியின் கடமையாகும். அதற்கான முன்மொழிவுகளை முன்வைத்து, அவற்றை வரைவில் சேர்ப்பது நீதி அமைச்சகத்தின் கடமை எனக் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், நவம்பர் 06 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில், ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கருத்துருவில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு இலங்கைக்கே உரித்தான கருத்தியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை மாத்திரம் முன் வைக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டமூலங்களை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதி செயலணியிடமிருந்து தெளிவாக நீக்கப்பட்டுள்ளது.
சட்டமூல வரைபுகளை நீதியமைச்சின் பொறுப்புகளை , வண.ஞானசார தேரரின் செயலணிக்கு மாற்றுவதற்கு நீதியமைச்சர் மொஹமட் அலி சப்ரி கடும் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா கடிதத்தை கூட சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் புதிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, திரு.அலி சப்ரி தனது போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.