ஷாரா படுகொலை செய்யப்பட்டுவிட்டாரா? – அரசிடம் எதிரணி கேள்வி.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிடம் இருக்கும் பிரதான சாட்சியாளர் ஷாரா என்ற பெண் இன்றும் இராணுவ முகாமில் உள்ளாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? அல்லது இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல விட்டீர்களா? என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஈஸ்டர் தாக்குதல் நடத்த சில தினங்களுக்கு முன்னர் வனாதவில் பகுதியில் இரண்டு பொலிசார் கொலை செய்யப்பட்ட வேளையில் அவர்களைக் கொலை செய்தது யார் என ஆராய முயற்சித்த வேளையில் அதனை விடுதலைப்புலிகளின் மேல் சுமத்தினர். அதேபோல் ஈஸ்டர் தாக்குதலையும் விடுதலைப்புலிகள் கணக்கில் சேர்த்து திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பியும் அதற்குப் பதில் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியிடமும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடமும் கேள்வி எழுப்பியும் அவர்கள் உறுதியான பதில் கூறவில்லை.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் அன்று கைதுசெய்யப்பட்ட லொறிகள் இரண்டையும் ஒரு பொலிஸ் உயர் அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய விடுதலை செய்யும் வேளையில் 5 ஆயிரம் ரூபா நோட்டுகளில் கப்பம் பெற்ற நபர் யார்? அந்த லொறியின் உரிமையாளர் யார்? குறித்த பொலிஸ் அதிகாரி ஹோட்டல் ஒன்றில்
இருத்த வேளையில் அந்த ஹோட்டலுக்கான பற்றுச்சீட்டுக்கான பணத்தை செலுத்தியது யார்? அவர் இன்று அரசில் எந்த இடத்தில் உள்ளார்? இந்த அரசில் எவ்வாறான கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டுள்ளார்? அவர் மீது இருந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது? இவ்வாறு பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலங்கையின் கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் இந்த நபரா? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் கேள்விகளாக நாம் முன்வைக்கின்றோம்” – என்றார்.