தரத்துடன் கூடிய உரம் வந்தால் ஏற்கத் தயார்! – சீனாவின் கப்பல் திரும்பிச் செல்ல வேண்டும்.
“சீன அரசுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. உரத்துடன் வந்துள்ள கப்பல் தொடர்பாகவே பிரச்னை உள்ளது. வேண்டுமென்றால் அதனைத் திருப்பி எடுத்துச் சென்று தரத்துடன் கூடிய உரத்தைக் கொண்டுவந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.”
இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாட்டில் உரம் தொடர்பில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினாலும் 5 இலட்சத்து 21 ஆயிரம் ஹெக்டயரில் விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்துள்ளனர் எனவும், விவசாய நிலங்களில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நூறுவீதமான நிலப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது நாட்டின் விவசாயத்துறையை வீழ்ச்சிக்குக் கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. எமது அரசைக் கொண்டு வருவதற்கு விவசாயிகள் பங்களித்துள்ளனர். இதனால் விவசாயிகளின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.
தற்போது வரையில் பெரும்போகத்துக்காக 8 இலட்சம் ஹெக்டயரில் விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். இதன்படி இதுவரையில் 5 இலட்சத்து 21 ஆயிரம் ஹெக்டரில் விவசாயிகள் பயிர்ச் செய்கை செய்துள்ளனர். இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறு வீதமும், முல்லைத்தீவில் 99 வீதமும், மன்னாரில் 33 வீதமும், யாழ்ப்பாணத்தில் 97வீதமும், வவுனியாவில் 62 வீதமும், மட்டக்களப்பில் 83 வீதமும், திருகோணமலையில் 44 வீதமும், அம்பாறையில் 48 வீதமும் என விவசாயம் செய்துள்ளனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மையே. ஆனாலும், விவசாயிகள் விவசாய நிலைக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், செல்வதற்கு இடமில்லாத எதிர்க்கட்சியினர் இதில் மேலே வருவதற்கு முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் எங்களிடம் எதிர்ப்பு கிடையாது.
அரசு சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுத்தன. இந்தத் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். இரசாயன உரம் என்பது நாட்டில் இரண்டாவது மாபியாவே. நாங்கள் சூழல் பாதுகாப்பைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் சீன உரம் தொடர்பாகக் கூறியுள்ளார். நாங்கள் சர்வதேச மனுக்கோரல் அடிப்படையில் உரத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த அளவில் தரமானதாக இல்லாத காரணத்தால் அந்த உரத்தைக் கொண்டு வருவதைத் தவிர்த்துள்ளோம்.
இந்த விடயத்தில் நாங்கள் தெளிவான தீர்மானத்தில் இருக்கின்றோம். இதில் சீன அரசுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. வந்துள்ள கப்பல் தொடர்பாகவே பிரச்னை உள்ளது. வேண்டுமென்றால் அதனைத் திருப்பி எடுத்துச் சென்று தரத்துடன் கூடிய உரத்தைக் கொண்டுவந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” – என்றார்.