சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை.. தண்ணீர் சூழ்ந்த தலைநகரம்
சென்னையில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னையில் இடைவெளியில்லாமல் தொடர் மழை பெய்து வருகிறது. நகரின் மையப்பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் அதிகபட்சமாக எண்ணூர் துறைமுகம் பகுதியில், 14.6 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. எம்.ஆர்.சி.நகரில் 12 சென்டிமீட்டர் அளவுக்கும், வில்லிவாக்கத்தில் 10 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. தரமணியில் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர்,கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுவையில் இன்று அதிகனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.