யமுனையில் ரசாயன கழிவு: தெர்மாகோல் பாணியில் டெல்லி அரசு!
யமுனை ஆற்றில் ரசாயன கழிவால் ஏற்பட்ட நுரையில் பக்தர்கள் நீராடும் புகைப்படம், வீடியோ ஆகியவை வெளியாளி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நுரையை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு, படகு மூலம் சுத்தம் செய்தல், தண்ணீர் தெளிப்பு ஆகிய நடவடிக்கையில் டெல்லி அரசு இறங்கியுள்ளது.
டெல்லி மக்கள் சத் பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவானது கொண்டாடப்படுகிறது. யமுனை நதியில் குளித்து சைவ உணவை உண்டு 36 மணிநேரம் விரதம் கடைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில், டெல்லியின் கலிந்தி கஞ்ச் பகுதியில் பாயும் யமுனை நதியில் ரசாயன கலவையின் காரணமாக பொங்கும் நுரையுடன் காட்சியளித்தது. பக்தர்களும் ரசாயன நுரையுடன் ஆற்று நீரில் நீராடினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்தன. யமுனை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு 2,419 கோடி ரூபாயை டெல்லி அரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால் ஆறு மாசடைந்து காணப்படுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே என பாஜக கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், ஆற்றில் மக்கள் நீராடும் பகுதிக்கு நுரை வராத வகையில் மூங்கிலால் ஆன தடுப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அழுக்கு நுரை ஏற்படாமல் இருக்க ஊழியர்கள் மூலம் ஆற்றில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஆற்றில் காணப்படும் ரசாயன நுரைகளை அகற்றும் பணியில் 15 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியில், மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் மூலம் தடுப்பு அமைத்து அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜூ பிரபலமானார். தற்போது அதுபோன்ற நடவடிக்கையை டெல்லி அரசு எடுத்துவருவதாக சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.