அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு பிரதமர் தலையீடு.
•முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேலதிகமாக 30000 மில்லியன் ரூபாய்
•வரலாற்றில் முதல் முறையாக மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 7.5 சதவீதம் கல்விக்கு ஒதுக்கீடு
சுமார் இருபத்தைந்து வருடங்களாக நீடித்து வந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அறிவித்தமைக்காக பாராளுமன்ற குழு அறை 01இல் இடம்பெற்ற சந்திப்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
பிள்ளைகளினதும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 30000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாகவும், அதற்கமைய மொத்த வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டார்.
அதற்கமைய தொழிற்சங்க கோரிக்கையை நிறைவேற்றியமை குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் இக்கலந்துரையாடலின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்பான்கொட அவர்கள் இதன்போது அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளித்தார்.
1997ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இந்நெருக்கடியின் முழுமையான சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு குறிப்பிட்ட கால வரையறை அவசியம் என ஒப்புக்கொண்ட அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதன் ஆரம்ப கட்டமாக மூன்றில் ஒரு பங்கை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒரே தடவையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டனர்.
குறித்த சந்திப்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவிக்கையில்,
நாம் இது தொடர்பில் கடந்த ஜுலை மாதம் 26ஆம் திகதியே முதல் முறையாக கலந்துரையாடினோம். அதன்போது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொகுகே, கலாநிதி பந்துல குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ரமேஷ் பதிரன, லசந்த அழகியவன்ன ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்தோம். அது பின்னர் நான்கு பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன்போது பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டது. இது இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக நீடிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடாகும். இதனை சீரமைக்கவே கோரிக்கை விடுக்கப்பட்டது. முழு அரச சேவையிலும் சம்பள ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே எமது பரிந்துரையாகும்.
தற்போது வரவு செலவுத் திட்டம் வருகிறது. மேற்குறிப்பிட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி பீடத்தின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், என்னை சந்தித்த போது இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரியிருந்தனர்;. கௌரவ பிரதமர், குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இம்முரண்பாட்டை கண்டிப்பாக தீர்ப்பதற்கு பரிந்துரைத்துள்ளனர். தொழிற்சங்கத்தின் சார்பில் எமக்கு பெரும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. பிள்ளைகளுக்கு கல்வியை பெற்றுக் கொடுப்பதே எமக்குள்ள ஒரே தேவையாகும். தற்போது சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாம் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேனும் பரிந்துரைக்கப்பட்ட இந்நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.
இது முரண்பாட்டை தீர்க்கும் செயற்பாடே தவிர சம்பள அதிகரிப்பல்ல. இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தீர்க்க முடியாதிருந்த சம்பள முரண்பாட்டை சாதாரண மட்டத்தில் ஒரு தீர்வாக மாத்திரம் பார்க்குமாறு இங்குள்ள மஹாசங்கத்தினர் உள்ளிட்ட தொழிசங்கத்தினரிடம் கோருகின்றேன். அமைச்சரவை அனுமதிக்கமைய தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 30000 மில்லியன் ரூபாயை நாம் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிபர்- ஆசிரியர் சம்;பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு ஒதுக்குவோம். வரவு செலவுத் திட்டத்திற்கும், அமைச்சரவைக்கும் தெரிவிப்பதற்கு முன்னதாக உங்களுக்கு கூறிய ஒரே இரகசியம் இது.
மற்றைய அமைச்சர்கள் குறை கூறப் போவதில்லை. இங்கு இல்லாத போதிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இம்முரண்பாட்டை தீர்க்குமாறு கோரினர். அதனை நினைவுபடுத்த வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்திற்காக இதனை தீர்ப்பதற்கு நாம் தீர்மானித்தோம். மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் கல்விக்கு 6 சதவீதத்தை ஒதுக்குமாறு சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இறுதியில் அவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்தனர். ஆனால் அதன் பின்னர் 6 சதவீதத்தை மறந்துவிட்டனர்.
ஆனால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் எமது மொத்த செலவில் 7.51 சதவீதம் கல்விக்காக ஒதுக்குகின்றோம். அது இந்நாட்டின் எதிர்காலத்திற்காகவாகும். அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், குறிப்பாக கல்வி அமைச்சர் ஆகியோர் இதனை நிறைவேற்றுமாறு எம்மிடம் கோரினர். வரலாற்றில் முதல் முறையாகவே கல்விக்காக 6 சதவீதத்திற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்படுகிறது.
அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு மறந்திருப்பினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட எமது அரசாங்கத்திற்கு அது நினைவிருக்கிறது. கல்வியே இந்நாட்டின் பாரிய முதலீடு என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
சுகாதாரம் மற்றும் கல்வியை எடுத்துக் கொண்டால் நாம் உலகின் சில அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக உள்ளோம். தெற்காசியாவில் நாம் உயர்வான இடத்தில் காணப்படுகிறோம். முதலீடு போன்றே செயற்திறனையும் அதிகரிக்குமாறு நாம் இந்த சகல தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கோருகின்றோம். கல்வியை மேம்படுத்துவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை கல்வி அமைச்சிற்கும், அரசாங்கத்திற்கும் வழங்குமாறு கோருகின்றோம். அதற்கு மேலதிகமான கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் என்ற ரீதியில் எமக்கு கலந்துரையா முடியும் என அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சுமித் விஜேசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபான்கொட, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைமை செயலாளர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.