உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல்!
Merck எனும் நிறுவனம் தயாரித்துள்ள Molnupiravir எனும் இந்த மாத்திரையை , 18 வயதுக்கு மேற்பட்டு லேசானது முதல் மிதமான தொற்று பாதிப்பு கொண்டவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை மற்றும் தொற்றின் தீவிரத்தன்மையை அடைவதை, கட்டுப்படுத்த இந்த மாத்திரை பயன்படும் என மருந்து நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இந்த மாத்திரையின் விலை ரூ.2000 முதல் 3000 ஆகவோ அல்லது ரூ.4000ஆகவோ இருக்கும். பின்னர், சந்தைக்கு வரும் போது இதன் விலை 500 முதல் 600 ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, பைசர் நிறுவனத்தின் Paxlovid மாத்திரை தொற்றின் தீவிரதன்மையை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவதாகவும், விரைவில் இதற்கும் ஒப்புதல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக கோவிட் வியூகக் குழுவின் தலைவர் மருத்துவர் ராம் விஸ்வகர்மா கூறும்போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு, ஒரு சில நாட்களில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். Paxlovid மாத்திரைக்கு ஒப்புதல் கிடைக்க இன்னும் சிறிது காலம் ஆகலாம்.
இந்த இரண்டு மாத்திரைகளும் நம்மை பெருந்தொற்றில் இருந்து முடிவுக்கு கொண்டு வருவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால், இவை தடுப்பூசியை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.