நாசா, செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது.
ஏற்கெனவே ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது, முன்பு எப்போதும் கண்டிராத புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தினை முதன் முறையாக படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்த படத்தினை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
நாசாவானது 1970-ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக பல விண்கலன்களை அனுப்பி வருகிறது. தற்போது அந்த ஆராய்ச்சியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததா இல்லையா என்பதையும், இந்த கிரகம் ஒரு நாள் மனிதர்கள் வாழக்கூடியதாக மாறுமா என்பதையும் ஆய்வின் முடிவுகள் ஒரு நாள் வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.