போர் தயார் நிலையை ஒத்த பெரும் போர் பயிற்சியில் சீனா.
அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் தாய்வானுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் முப்படைகளையும் குவித்து போர் தயார் நிலையை ஒத்த பெரும் போர் பயிற்சியில் சீனா ஈடுபட்டது.
தாய்வானுக்கு அமெரிக்க நாடாளுமன்றக் குழு பிரதிநிதிகள் இராணுவ விமானத்தில் வந்தததைக் கண்டித்து இந்தப் போர்ப் பயிற்சியை நடத்தியதாக சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தாய்வானை சீனாவின் ஆளுகைக்குள் உள்ள ஒரு பகுதியென சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்து தாங்கள் ஒரு இறையாண்மை கொண்ட சுயாதீன தனியரசு என தாய்வான் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் சீண்டும் நடவடிக்கையாக சீன விமானப் படையின் போர் விமானங்கள் அடிக்கடி தாய்வான் வான்பரப்புக்குள் நுழைந்து அந்நாட்டை எரிச்சலூட்டி வருகின்றன.
இதனால் சீனா – தாய்வான் இடையில் பதட்ட நிலை அதிகரித்துள்ளது.
இதேவேளை, மற்றொரு எரிச்சலுட்டும் நடவடிக்கையான நான்கு ஜே-16 போர் விமானங்கள் மற்றும் இரண்டு கண்காணிப்பு விமானங்கள் உட்பட ஆறு சீன இராணுவ விமானங்கள் செவ்வாயன்று தாய்வானில் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற குழு பிரதிநிதிகள் தாய்வானுக்கு விஜயம் செய்துள்ளதாக செய்திகள் வெளியான அதே நாளில் சீனாவின் இந்த அச்சுறுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, அமெரிக்க நாடாளுமன்ற பிரநிதிகளின் தாய்வான் விஜயம் குறித்துக் கருத்து வெளியிட்ட தாய்வான் பிரதமர் சு செங்-சாங் தாய்வான்- அமெரிக்க உறவுகள் “மிக முக்கியமானவை” என்றார் அத்துடன் இது “நண்பர்களிடையேயான பரஸ்பர பயணம் ” எனவும் அவா் கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ விமானம் மூலம் தாய்வான் வந்தடைந்ததாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை சீனாவின் தாய்வான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளரும் கண்டித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தால் உடனடியாக போர் மூளும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
“வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று செய்தித் தொடர்பாளர் ஜு பெங்லியன்நேற்று புதன்கிழமை ஒரு வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவர்களின் பயணங்களின்போது இராணுவ விமானங்களில் அழைத்துச் செல்லப்படுவது அசாதாரணமானது அல்ல என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
தாய்வான் சென்ற அமெரிக்க இராணுவ விமானத்தில் யார் இருந்தார்கள்? என்ற விவரங்களை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கவில்லை.