வடியாத வெள்ளம்.. வண்ணாரப்பேட்டையில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையில் மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தெருக்களில் மழைநீர் வடியாததால் வீடுகளில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகளை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வீடுகளில் தண்ணீர் வெளியேறாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் வடிய எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் சிறு குழந்தைகளை வைத்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் இதுகுறித்து பலமுறை சட்டமன்ற உறுப்பினரிடமும் மாநகராட்சி அதிகாரிகளும் புகார் அளித்தும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் அவர்களிடம் சமரசம் பேசினர். பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படாத பொதுமக்கள் காணவில்லை காணவில்லை என கோஷமிட்ட படியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.