மீஹவத்தை கொலைச் சம்பவம்: மேலும் இரு பெண்கள் சிக்கினர்.

அங்கொடை, மீகஹவத்தைப் பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு பெண்கள் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை, பந்தகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னதாக சந்தேகநபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது கைதுசெய்யப்பட்ட இருவரும் முல்லேரியா மற்றும் பொரளை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கடந்த 26ஆம் திகதி காலை இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியமை சி.சி.ரி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர், அங்கொடை லொக்காவின் உதவியாளர் என்பதும், அவர் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது.