பேருந்து பயணத்தில் சத்தமாக பாட்டு கேட்பவர்களுக்கு புதிய தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி

பேருந்தில் பயணம் செய்யும் போது மொபைல் போன் ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை நடத்துனர்கள் பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மொபைல் போன் பயன்பாடு கடுமையாக அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தவழுகின்றன. வைத்த கண் வாங்காமல் பல மணி நேரங்களாக மொபைலை மெய் மறந்து பார்ப்பவர்கள் இன்று ஏராளம். மொபைல் போன் பயன்பாட்டுக்கு பலரும் அடிமைகளாகவும் மாறிவிட்டனர்.

மாணவர்களின் கைகளிலும் ஸ்மார்ட் போன், வேலை நேரத்திலும் ஸ்மார்ட் போன், வீட்டில் பெண்கள் சமையலின் போதும் மொபைல் தான், பேருந்து, ரயிலில் பயணிப்பவர்கள் முன்பெல்லாம் புத்தகம் படிப்பார்கள் இல்லையென்றால் சக பயணிகளிடம் அரசியல், சினிமா என பல கதைகளையும் பேசி பேச்சுக் கொடுத்தவாறே பயணம் செய்வார்கள். ஆனால் தற்போதெல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசுவதே, ஏன் பார்ப்பதே அபூர்வம் தான்.

மொபைலில் பாட்டுக்கள் கேட்டவாறும், படங்கள் பார்த்தவாறும், யுடியூபில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்தவாறும் பயணம் செய்பவர்கள் தான் இன்று அனேகம் பேர். ஆனால் பக்கத்தில் இருப்பவர்கள் சில நேரம் இதனால் எரிச்சல் அடைகின்றனர். சத்தமாக வீடியோக்கள் பார்ப்பது, சிரிப்பது என பக்கத்தில் இருப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவதை சகஜமாக பார்க்க முடியும்.

இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளான நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்கையில் ஸ்பீக்கரை ஆன் செய்து அதிக சத்தத்துடன் மொபைலில் வீடியோக்கள், பாட்டுக்கள் கேட்பதால் இடையூறு ஏற்படுவதாக ரிட் மனு ஒன்றை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ஒருவர். இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட கர்நாடக நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேருந்தில் இனி மொபைல் போனில் அதிக சத்தத்துடன் கூடிய வீடியோக்களை பார்ப்பவர்கள், சக பயணிகளுக்கு இடையூராக இருக்க கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக வெளியேற்றலாம் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.