புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு.
புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திரு.ஆ.கேதீஸ்வரன், உதவி மாவட்டச் செயலாளர்திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன்,வைத்திய கலாநிதி திரு.ஜி.ரஜீவ், வைத்திய கலாநிதி திரு.எஸ்.சிவகணேஷ், பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.க.நடராஜா, மாவட்ட மேலதிக பதிவாளர்கள் மற்றும் பிறப்பு,இறப்பு,விவாகப் பதிவாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தரவுகளை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த செயலமர்வானது புற்றுநோயின்தன்மை, புற்றுநோய் பாதிப்பிலிருந்து எவ்வாறு தடுத்தல் போன்ற பல முக்கிய தீர்மானங்களுக்கு ஆதாரமாக அமையுமென தெரிவித்ததுடன் மிக முக்கியமாக கிராமமட்ட தரவுகளே தேசியரீதியில் சரியான தரவுகளாக அமைவதுடன் இத்தரவுகள் தேசிய ரீதியில் பல தீர்மானங்களை எடுக்க உதவுமென குறிப்பிட்டார். மேலும் இச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக சிறப்பாக முன்னெடுத்து செல்வது அவசியமென தெரிவித்தார்.
மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் புற்றுநோய் இறப்பு மற்றும் பாதிக்கப்படுபவர் விவரங்கள் பதியப்பட்டு ஆய்வு செய்தல் மற்றும் ஆய்வின் முடிவுகளை வைத்து அதனைத் தடுத்தல், அதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் மேற்கொள்ள உதவுமென குறிப்பிட்டதோடு, புற்றுநோயாளர்களின் இறப்புக்களை பதிவு செய்யும் இத்திட்டம் தேசியரீதியில் வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் இரண்டாவதாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.