வயநாட்டில் பரவும் நோரோ வைரஸ் பாதிப்பு: கேரளாவுக்கு அடுத்த அதிர்ச்சி!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுக்குள் வராதநிலையில் வயநாட்டில் 13 பேருக்கு நோரோவைரஸ் (NoroVirus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கேரள சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை பல மாநிலங்களிலும் கட்டுக்குள் வந்து இயல்பு நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பு குறைந்தபாடில்லை. தினசரி பாதிப்பு 7,000க்கு குறையாத நிலையில் இந்தியாவின் அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வரும் மாநிலங்களுள் கேரளா முதல் இடத்தில் நீடிக்கிறது.

இதனிடையே கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் வைத்திரி அருகேயுள்ள பூக்கோடு எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் (Noro Virus) தாக்குதலுக்கு ஆளாகியது தெரியவந்தது. இது விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். சுகாதாரமற்ற உணவு மற்றும் நீர் காரணமாகவும் நோரோ வைரஸ் பரவுகிறது.

இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சரான வீனா ஜார்ஜ் இது குறித்து செய்தியாளர்களிடையே பேசுகையில், நோரோ வைரஸ் குறித்து அச்சப்படத்தேவையில்லை. அதே நேரத்தில் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். உரிய நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை மூலம் விரைவாகவே இந்த நோயை குணப்படுத்த முடியும் என தெரிவித்தார். மேலும் நோய்த்தடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டார்.

நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோவைரஸ் இரைப்பை குடல் நோயை ஏற்படுத்துகிறது, இதில் வயிறு மற்றும் குடலின் உட்புறத்தின் வீக்கம், கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

நோரோ வைரஸ் ஆரோக்கியமானவர்களை பெரிதாக பாதிக்காது, ஆனால் இது இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நோரோவைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலம் எளிதில் பரவுகிறது. வயிற்றில் வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவரால் தயாரிக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உணவை சாப்பிடுவதன் மூலமும் இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மலம் மற்றும் வாந்தி மூலம் வைரஸ் பரவுகிறது.

நோரோ வைரஸின் அறிகுறிகள்:

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், அதிக வெப்பநிலை, தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை நோரோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும். கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மற்றும் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நோய்த்தடுப்பு முறை:

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நோரோவைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும், வாய்வழி ரீஹைட்ரேஷன் கரைசல்கள் (ORS) மற்றும் காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும். விலங்குகளுடன் பழகுபவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

குடிநீர், கிணறுகள் மற்றும் சேமிப்பு தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு குளோரினேஷன் செய்ய வேண்டும். மக்கள் வீட்டு உபயோகத்திற்கு குளோரின் கலந்த நீரை பயன்படுத்த வேண்டும் மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவ வேண்டும். கடல் மீன் மற்றும் நண்டு மற்றும் மசல்ஸ் போன்றவற்றை நன்கு சமைத்த பின்னரே உண்ண வேண்டும். திறந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.