பல இலட்சம் புதிய தொற்றாளர்கள்; 27,000 மரணங்கள்!
ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுமார் 20 இலட்சம் புதிய கொவிட் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று நோய் தொடங்கியதிலிருந்து ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மிக அதிகளவு தொற்று நோயாளர் தொகை இதுவாகும் என உலக சுகாதார அமைப்பு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 27,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. உலகில் கடந்த வாரம் பதிவான மொத்த கொரோனா மரணங்களில் 50 வீதத்துக்கும் அதிகமானவை ஐரோப்பாவில் பதிவானதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று இடம்பெற்ற செய்திளாளர் சந்திப்பில் கூறினார்.
கிழக்கு ஐரோப்பாவில் குறைந்த தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளில் மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவில் உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி வீதங்களைக் கொண்ட நாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டார்.
உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய தொற்று நோய் புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்புகள் நவம்பர் 7 வரையிலான ஒரு வாரத்தில் 10 வீதம் அதிகரித்துள்ளன.
அத்துடன், ஐரோப்பாவில் புதிதாக கொரோனா தொற்று 7 வீதம் அதிகரித்துள்ளது.
எனினும் உலகில் ஏனைய சில பிராந்தியங்களில் கொரோனா தொற்று நோயில் பாரிய அதிகரிப்பு காணப்படாத அதேவேளை, சில பிராந்தியங்களில் தொற்று குறைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வாரத்தில் 48,000 ஆக இருந்தது. இது முந்தைய வாரத்தை விட 4 வீதம் குறைவாகும்.
ஐரோப்பாவில் 100,000 மக்கள்தொகைக்கு 208.9 என்ற அடிப்படையில் கடந்த வாரம் புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். அதேநேரம் அமெரிக்காவில் 100,000 மக்கள்தொகைக்கு 68.8 என்ற வீதத்திலேயே தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.
இந்நிலையில் மீண்டும் நோற்று நோயின் மையப் பகுதியாக ஐரோப்பா மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளர் ஹான்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பெப்ரவரி மாதத்திற்குள் ஐரோப்பாவில் மேலும் 5 இலட்சம் இறப்புகள் பதிவாகலாம் எனவும் அவா் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.