தில்லியில் காற்று மாசு: ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்
தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக பள்ளிகள் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டு இணைய வழியில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் காரணமாக, காற்றின் தரக் குறியீடு 471 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
ஃபரீதாபாத் (460), காஜியாபாத் (486), கிரேட்டா் நொய்டா (478), குருகிராம் (448), நொய்டா (488) ஆகிய நகரங்களில் உள்ளிட்ட தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டுப்படுத்தமுடியாத காற்று மாசின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை (நவ.15) முதல் ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் வகுப்புகள் இணையவழியில் நடைபெறும் எனவும் பள்ளிக் குழந்தைகள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் அலுவலங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.