சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட பெண்ணின் சடலம் – குடியிருப்புவாசிகளை பதறவைத்த கொலை

ஈரோட்டில் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் குடியிருப்புகள் நிறைந்த சாஸ்திரிநகர் லட்சுமிகார்டன் பகுதியில் இருதினங்களுக்கு முன் அதிகாலையில் காரில் வந்த மர்மநபர்கள் சாக்கு மூட்டை ஒன்றை சாலையோரம் வீசி சென்றனர். குப்பை மூட்டையாக இருக்கும் என அப்பகுதியினர் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதும் இருந்தது.மர்ம நபர்கள் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து மூட்டையாக கட்டி வீசி சென்றதும் தெரியவந்தது.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலை செய்யப்பட்ட பெண் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்ற பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..