சு.க. தலைமையிலான ஆட்சிக்கு வியூகம்!
“மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை ஸ்தாபிப்பதே எமது பிரதான இலக்காகும். 31 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சு.கவின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடத்திய பேச்சு எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள அரசியல் தீர்மானங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், 31 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சில நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு சுதந்திரக் கட்சி கிராமிய மட்டத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கட்சியைப் பலப்படுத்துவது பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை ஸ்தாபிப்பது எமது பிரதான இலக்காக உள்ளது.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சுதந்திரக் கட்சியின் தலைவரான பாரளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள அரசியல் தீர்மானங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
அரசின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் பல எதிர்பார்ப்புகளக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். தவறான தீர்மானங்களால் மக்களின் வெறுப்பை அரசு குறுகிய காலத்துக்குள் பெற்றுக்கொண்டுள்ளது.
சேதன பசளை விவகாரம் அரசுக்குப் பெரும் நெருக்கடியை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தும். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என சுதந்திரக் கட்சி சார்பில் அரசிடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால், அரசு சிறந்த ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. அதனால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களது பிரதான கோரிக்கையாகக் காணப்படுகின்றது.
அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சுதந்திரக் கட்சி சிறந்த தீர்மானத்தை வெகுவிரைவில் அறிவிக்கும்” என்றார்.