கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரிந்த மஹேலவுக்கு விருது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் ஐ.சி.சி.யின் ஹோல் ஒப் பேம்க்கு தெரிவாகியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக 2009ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஹோல் ஒப் பேம் விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த வருடம் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இங்கிலாந்தின் ஜென்னெட் பிரிட்டின், தென் ஆபிரிக்காவின் ஷோன் பொலோக் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல ஜயவர்தன 11,814 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதில் 34 சதங்களும், 50 அரைச் சதங்களும் அடங்குகின்றன.
அதேபோல், 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12,650 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 19 சதங்களும், 77 அரைச் சதங்களும் அடங்குகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஆகியோருக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.