ரிக்ஷா ஓட்டுனர் குடும்பத்துக்கு தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து எழுதி வைத்த பெண்!!
மூன்று அடுக்கு வீடு, நகைகள் என ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்து அனைத்தையும், ஏழ்மையில் தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் குடும்பத்தினர் பெயரில் உயில் எழுதி வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் பெண்மணி ஒருவர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரின் சுதாஹத் எனும் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் 63 வயதாகும் மினாடி பட்னாயக் எனும் பெண்மணி. இவருடைய கணவரும், மகளும் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில் தனியாக வசித்து வரும் மினாடி, தனது மூன்று அடுக்கு வீடு, நகைகள் என ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அனைத்தையும் ஏழ்மையில் வசித்து வரும் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவரின் குடும்பத்துக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார்.
மினாட்டி பட்னாயக்கின் கணவரும் தொழிலதிபருமான குருஷ்ண குமார் பட்னாயக் கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மினாட்டி மீள்வதற்குள், அவரின் ஒரே மகள் கமால் குமாரி பட்னாயக் அடுத்த ஆறு மாதத்தில் (ஜனவரி 21, 2021) மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். அவரின் மகளுக்கு இறுதி சடங்குகள் செய்து முடித்த பின்னர் மினாட்டி பட்னாயக்கின் ஒரு உறவினர் அல்லது நண்பர் கூட அவர் உடல்நிலை குறித்து கூட விசாரிப்பதற்காக தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் கடும் விரக்தி அடைந்தார்.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்திருக்கும் மினாட்டி பட்னாயக்குக்கு எப்போதும் போல உறுதுணையாக இருந்தது அவரின் கணவரிடம் கடந்த 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வந்த புத்தா சமால் மற்றும் அவரின் குடும்பத்தினர் தான். பல ஆண்டுகளாக மினாட்டியின் கணவர் மற்றும் மகளை ரிக்ஷாவில் அழைத்து சென்று வந்தது புத்தா சமால் தான், ஆனால் மினாட்டியின் கணவர் இறந்த பின்னரும், அவரின் மகள் மறைந்த போதும் உறவினர்கள் புறந்தள்ளிய போதும் புத்தா சமால் , அவரின் மனைவி, அவரின் இரு மகன்கள் மட்டுமே மினாட்டியை கனிவோடு கவனித்து வந்திருக்கின்றனர்.
தனது சொத்துக்களை யாருக்காவது நன்கொடையாக அளிக்கலாம் என மினாட்டி முடிவெடுத்த போது புத்தாவின் குடும்பத்துக்கு இதனை வழங்கிடவே அவர் முடிவெடுத்தார். இதற்கு முன் புத்தாவின் குடும்பத்தினருக்காக ஒரு நிலம் வாங்கி கொடுக்கலாம் என நினைத்திருந்த நிலையில் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணங்களுக்கு பின்னர் இந்த சொத்துக்கள் எனக்கு மதிப்பற்றவையாக மாறிவிட்டன. எனவே புத்தாவின் குடும்பத்தினரை என்னுடனே தங்கவைக்க முடிவெடுத்தேன், பின்னர் அவர்களுக்கே எனது சொத்தையும் உயில் எழுதி வைக்க நினைத்து அதனை நிறைவேற்றியிருக்கிறேன்.
முதலில் என சகோதரி ஒருவர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி செய்தால் எப்போதும் என்னுடன் பேசமாட்டேன் என தெரிவித்தார். ஆனாலும் கடந்த 25 ஆண்டுகளாக என் குடும்பத்தினர் மீது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உண்மையான பற்றோடும், பாசத்தோடும் இருந்த புத்தாவின் குடும்பத்தினருக்கு எனது சொத்துக்களை உயில் எழுதி வைத்திருக்கிறேன் என்றார் மினாட்டி பட்னாயக். அதே நேரத்தில் கனவிலும் கூட இப்படி ஒன்று நடக்கும் என கற்பனை செய்து கூட பார்த்ததில்லை, பணத்துக்காக என்றில்லாமல் எப்போதும் போல மினாட்டியை நன்றாக பார்த்துக் கொள்வோம் என புத்தா தெரிவித்தார்.