எலிக்குத்தான் சாவு, பூனைக்கு அது விளையாட்டு : சண் தவராஜா
போலந்து நாட்டின் எல்லையோரமாகத் தடுக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் விவகாரம் உலகின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கின்றது. சுய பாதுகாப்பு தேடியும், சுகமான வாழ்க்கையை நாடியும் ஐரோப்பாவை நோக்கி ஆண்டுதோறும் படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களில் இவர்களும் ஒருசிலர்.
ஐரோப்பாவோடு எந்தவித விருப்பத் தொடர்பும் இல்லாது இருந்த இந்த மக்களை, அவர்களின் நாடுகளுக்கே வந்து, அவர்களின் வளமான வாழ்க்கையைச் சீரழித்துவிட்டு, அதன் விளைவால் தமது வாழ்க்கையைத் தொலைத்த மக்கள் இன்று வெறுங்கையுடன், பல்லாயிரம் கிலோமீற்றர் தூரம் நடையாய் நடந்து, காலடிக்கு வந்திருக்கும் நிலையில் வேண்டாத விருந்தாளிகளாய் நடத்திக் கொண்டிருக்கிறது ஐரோப்பா.
ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் பெயர்களைக் கேட்டதுமே மேற்குலகு நடத்திய போர்களும், நடத்திக் கொண்டிருக்கின்ற போர்களும், அதனால் சீரழிந்த நாடுகளும், அதன் விளைவாக உருவான அகதிகளுமே ஞாபகத்துக்கு வருவர்.
தேவதூதர்கள் போல வேடமிட்டு தங்கள் நாடுகளுக்கு வந்த மேற்குலகினர், ஜனநாயம் பற்றி தமக்கு நடத்திய பாடங்களை உண்மையென நம்பி, அந்த நாடுகளுக்குச் சென்றால் வளமாக வாழலாம் என்ற நப்பாசையில், பல்வேறு கஸ்டங்களையும் தாங்கிக் கொண்டு ஐரோப்பாவின் நுழைவாயில் வரை வந்த மக்களை வரவேற்க வேண்டிய ஜரோப்பா தனது சுயரூபத்தைக் காட்டிய நிலையில், அதனை நம்ப முடியாமல் விக்கித்து நிற்கிறார்கள் அந்த மக்கள்.
அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்றான உயிர்வாழும் உரிமை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நடப்புலகில் அகதிகளின் உருவாக்கம் என்பது இயல்பாகவே நிகழ்கின்றது. அது மாத்திரமன்றி, வறுமைநிலைக்குத் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருவதையும், செல்வந்தர்கள் மென்மேலும் அதிக செல்வத்தைச் சேர்த்துக்கொள்பவர்களாகவும் மாறுவதையும் காண்கிறோம். சமமற்ற இந்த வாழ்நிலையும். மக்களை செல்வத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளைத் தேடி நாடுகளின் எல்லைகளைக் கடந்து விரட்டிக் கொண்டிருக்கின்றது.
சாமானிய மக்களின் அளப்பரிய தியாகங்களால் சுதந்திரத்தை வென்றெடுத்த நாடுகள், சுதந்திரத்துக்காககப் போரடிய மக்களின் நலவாழ்வுக்கான ஆட்சியை வழங்குவதற்குப் பதிலாக, தத்தம் நாடுகளில் உள்ள பணம்படைத்த ஒருசிலரின் நலன்களுக்கான ஆட்சியை வழங்குவதிலேயே முனைப்புக்கொண்டு செயற்பட்டு வருகின்றன. போலியான தேசபக்தி வெறியை ஏற்படுத்தி, அப்பாவி மக்களை அதன்மூலம் மூளைச்சலவை செய்துவிட்டு, தமது சுகபோக வாழ்க்கையின் பலிக்கடாக்களாக அவர்களை ஆக்கிவிட்டு நாட்டின் சகல வளங்களையும் பெரு வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதே ஆட்சியாளர்களின் பணி என்றாகிவிட்டது. இந்த நிலையில் மனித உரிமைகள், மனிதாபிமானம் போன்ற பண்புகள் ஏட்டில் மாத்திரமே உள்ள விடயங்களாகச் சுருங்கிப் போயுள்ளன. சொந்தச் சகோதரன் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காதவனா அயலவனின் துன்பத்தைக் கண்டு இரங்கப் போகின்றான்?
இலையுதிர்காலக் குளிரில், பரந்த வெளிகளில், முறையான தங்குமிடமோ, குளிரைத் தாங்கக் கூடிய ஆடைகளோ இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் பல நாட்களாகக் காத்திருக்கிறார்கள். அவர்களது ஒரே இலக்கு போலந்தைக் கடந்து யேர்மனிக்குச் செல்வதே. ஒன்று, இரண்டு, பத்து எனப் பலநூறு பேர் இவ்வாறு அண்மைய நாட்களில் யேர்மனிக்குச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு சென்றதால் போலந்து நாடு எந்தவித சிரமத்தையும், நட்டத்தையும் அடைந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு இருக்கையில், தற்போது பெலாரஸ் நாட்டின் எல்லையோரம் உள்ள சூனியப் பிரதேசத்தில் அகதிகளை மறித்து வைத்திருப்பதன் இரகசியம் என்ன?
ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றான யேர்மனியின் மறைமுகக் கட்டளையின் பேரிலேயே இத்தனையும் நடக்கின்றன என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு. அது மாத்திரமன்றி, யேர்மனியிலும், போலந்திலும் அதிகாரத்தில் இருக்கும் வலதுசாரி ஆட்சியாளர்கள், அகதிகள் விடயத்தில், குறிப்பாக முஸ்லிம் அகதிகள் விடயத்தில் ஒத்த கருத்தையே கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.
இந்த விடயத்தில் போலந்தின் தற்போதைய மனிதாபிமானமற்ற, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வட அந்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின்; ஆதரவும் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தனது எல்லையைப் பலப்படுத்தும் முயற்சியில் தனது வளங்கள் அனைத்தையும் குஸ்னிகா நகர எல்லையோரம் குவித்து வைத்துள்ளது போலந்து. தற்போதைய நிலையில் 12,000 வரையிலான படையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி, தனது நாட்டில் உள்ள சுமார் 25,000 பேர் வரையிலான தொண்டர் படையினரையும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போலந்து அறிவித்துள்ளது. போலந்து வேண்டுகோள் விடுத்தால், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகள் பாதுகாப்புப் பிரிவான ~புரொன்ரெக்ஸ்| இன் சேவைகளை வழங்கவும் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
பல்வேறு தடைகளைக் கடந்து பெலாரஸ் நாட்டுக்கு வருகை தந்த அகதிகள் அங்கிருந்து ஏதாவதொரு பாதை ஊடாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிடத் துடியாய்த் துடிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விடயம் தொடர்பான பட்டயத்தில் கைச்சாத்திட்டுள்ள போலந்து நாட்டில் கூட அவர்கள் அகதிகள் தஞ்சம் கோர முடியும். ஆனால், தற்போது முகாமிட்டுள்ள அகதிகளின் இலக்கு அதுவல்ல. குஸ்னிகா எல்லையோரப் பிராந்தியத்தில் அவசரகால நிலைப் பிரகடனம் செய்துள்ள போலந்து, அகதிகளுக்குத் தஞ்சம் அளிக்கும் சட்டத்தை நீக்கம் செய்துள்ளது.
ஆயுதமாகும் அகதிகள் என்ற தலைப்பில் இவ்வருடம் ஆகஸ்ட் 29ஆம் திகதி சிலோன் மிரரில் வெளியான கட்டுரை வாசகர்களின் நினைவில் இருக்கக்கூடும். அந்தக் கட்டுரையில், பெலாரஸ் நாட்டு அரசியல் நிலவரமும், மேற்குலகினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைக் காரணம் காட்டி, அகதிகளை ஐரோப்பாவினுள் அனுமதிக்க அந்த நாடு மறைமுகமாக உதவுகின்றது என்ற கோணத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தது. அந்த நிலையின் உச்சக்கட்டமாகவே தற்போதைய அகதிகள் விவகாரத்தை உற்றுநோக்க வேண்டும்.
பெலாரஸ் அரசுத் தலைவர் அலெக்சான்டர் லுகாஷெங்கோ தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார். தனது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக அகதிகள் படையெடுப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது அவரது வாதம். இதேவேளை, பெலாரஸ் நாட்டின் நட்பு நாடான ரஸ்யா இந்த அகதிகள் விவகாரத்தில் மறைமுகமாகச் செயற்பட்டு வருகின்றது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ரஸ்யா மறுத்துள்ளது. தற்போதைய நிலைமை தொடர்பில் யேர்மன் தலைமை அமைச்சர் அங்கெலா மேர்க்கல் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கடந்த வாரத்தில் இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக உரையாடல் நடத்தியுள்ளார். ‘இந்தப் பிரச்சனையில் உண்மையான தீர்வைநோக்கிச் செல்வதானால், பெலாரஸ் நாட்டு அரசுடன் பேச்சுக்களை நடாத்த வேண்டும்” என்பதே புட்டினின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால், தற்போதைய நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அதற்குத் தயாராக இல்லை. மென்மேலும், பெலாரஸ் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாகவே ஒன்றியம் முனைப்புக் காட்டி வருகின்றது.
விடாக்கண்டன், கொடாக்கண்டன் பாணியில் அரசாங்கங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் மாதப் பனியில் அகதிகள் பெரும் துயரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைக் காலத்தில், இங்கேயுள்ள அகதிகளில் பத்துப் பேர்வரை இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூனியப் பிரதேசத்தில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊடகர்கள் அந்தப் பகுதிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போலந்து தனது நாட்டினுள் அகதிகள் நுழைவதைத் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. பெலாரஸ் அவர்கள் மீண்டும் தமது நாட்டினுள் வருவதைத் தடுத்து வருகின்றது. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புக்கள் போலந்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அறிக்கைகளை விடுத்து வருகின்றன. நொடிப்பொழுதில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வைக் கண்டுவிடும் நிலையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் தனது அரசியல் கணக்குகளைத் தீர்த்துக் கொள்வதில் குறியாக இருக்கிறது. அகதிகளின் நிச்சயமற்ற வாழ்வோ துயரத்துடன் கழிந்து கொண்டிருக்கின்றது.