அரசின் தற்காப்பு பட்ஜட்! – சபையில் சாடியது ஜே.வி.பி.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தற்காப்பை அடிப்படையாகக் கொண்டதே தவிர அபிவிருத்தியை இலக்குவைத்து முன்வைக்கப்பட்டதல்ல என்று ஜே.வி.பி. எம்.பி. விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“தற்போது நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனாவே காரணம் என அதன் மீது பழியைப் போடுவதற்கு அரசு முயற்சிக்கின்றது. ஆனால், 2020ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் நாட்டில் கொரோனா இருக்கவில்லை. அந்தக் காலாண்டில் எமது விவசாயம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருந்தன. எமது மொத்த பொருளாதாரம் மறை 1.7 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. அரிசி மாபியா உருவானது. அதனால் பாரியளவில் அரிசி விலை அதிகரித்தது. அதேபோன்று சீனி இறக்குமதி வரியை 25 சதம் வரை குறைத்ததால் சீனி மாபியா உருவானது. இவை கொரோனா காரணமாக இடம்பெற்றவை அல்ல. இவற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு முடியாமல் போனது. அரசின் தவறான தீர்மானங்களே இவ்வாறானவற்றுக்குக் காரணங்களாக அமைந்தன.

இவ்வாறான நிலையில் நாடு தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இந்த வரவு – செலவுத் திட்டம் எத்தகைய தீர்வையும் முன்வைக்கவில்லை.

நாட்டில் தற்போது சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, விவசாயிகளுக்கான உரம் போன்ற பிரச்சினைகள் பெரும் பிரச்சினைகளாக தலைதூக்கியுள்ள நிலையில் இந்த வரவு – செலவுத்திட்டத்தில் அதற்கான தீர்வுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

சமையல் எரிவாயு மோசடி தொடர்பில் லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் வெளிப்படையாகவே கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் காரணமாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இவை ஒருபுறமிருக்க நிதிப் பிரச்சினையை தீர்க்க அரசு பணம் அச்சிடும் தீர்மானத்தை எடுத்தது. 2019 டிசம்பர் முதல் 2021 ஆகஸ்ட் வரை 2.8பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது. உற்பத்தி இல்லாமல் பணம் அச்சிடப்பட்டால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது. இன்று நாட்டில் அதுதான் இடம்பெற்றுள்ளது.

பணம் அச்சிடும்போது பணவீக்கம் அதிகரிக்கின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் நாட்டின் பணவீக்கம் 7.6 வீதமாகும். அடுத்த வருடம் பணவீக்கத்தை 5.5 வீதமாகக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தளவு பொருட்களின் விலை அதிகரிக்கும்போது எப்படி பணவீக்கத்தைக் குறைக்க முடியும்? அடுத்த வருடமாகும்போது பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் அடுத்த வருடம் 3 இலட்சம் கோடி ரூபா கடன் பெறுவதற்கு மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடனை சாதாரண விவசாயிகள், அரச ஊழியர்களிடமே அரசு பெறப்போகின்றது. அதனால் இந்த அரசும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் தற்காப்பை அடிப்படையாகக்கொண்டே வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றனரே தவிர அபிவிருத்தியை இலக்குவைத்து வரவு – செலவுத்திட்டத்தை முன்வைக்கவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.