நியூசிலாந்தை வீழ்த்திய கோப்பையைத் தூக்கியது ஆஸ்திரேலியா.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன்னின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 85 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் – மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசுவது என்றே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். ஆனாலும் அதிரடியை நிறுத்தாத இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 53 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர், ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் அதிரடியில் மிரட்டினார்.
இதனால் 18.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 77 ரன்களையும், டேவிட் வார்னர் 53 ரன்களையும் சேர்த்திருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை கையிலேந்தியது. மேலும் ஆஸ்திரேலிய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் எனும் பெருமையை ஆரோன் ஃபிஞ்ச் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.