கொரோனா மாத்திரையை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாத்திரையை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´Molnupiravir´ என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (15) கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன கூறுகையில்..
“தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு NMRA-விடம் சமர்ப்பிக்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று NMRA-விடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.” இவ்வாறு வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மர்க் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ´மோல்னுபிரவிர்´ (molnupiravir) என்ற மாத்திரையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த மருந்துகள் தற்போது சோதனையில் உள்ளன. ஆனால் ஆரம்ப முடிவுகள் வெற்றிகரமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரியான டோஸ் கொடுக்கப்பட்டால், கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை பாதியாகக் குறைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை வெற்றியடைந்தால், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வெற்றிகரமாக முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவுஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் தற்போது இந்த மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளதாக மர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.