பயிர் சேதத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சென்னை மட்டும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள், வெள்ளநீரில் மூழ்கி சேதமாகின. இதனால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நிவாரண பணிகளை முடுக்கிவிட்டதோடு, டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைக் கண்டறியும் வகையில், கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு வெள்ளப் பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.
17 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அமைச்சர்க குழு, இன்று முதலமைச்சரை சந்தித்து தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அதன் பின்னர், பயிர் சேத பாதிப்புக்கான நிவாரணம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.