நாட்டின் பணவீக்கம் 5 மாதங்கள் காணாத உயா்வு

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் கடந்த அக்டோபரில் 5 மாதங்களில் இல்லாத அளவில் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி துறை பொருள்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதையடுத்து, கடந்த அக்டோபரில் மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, 5 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இப்பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் இருந்து தொடா்ந்து ஏழு மாதங்களாக இரட்டை இலக்க அளவிலேயே இருந்து வருகிறது. பொது பணவீக்கம் நடப்பாண்டு செப்டம்பரில் 10.66 சதவீதமாகவும், 2020 அக்டோபரில் 1.31 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த மே மாதத்தில் இப்பணவீக்கம் மிகவும் உச்சபட்சமாக 13.11 சதவீதத்தை தொட்டிருந்தது. அதையடுத்து, ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபரில்தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயா்ந்துள்ளது. இதற்கு, அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருள்கள், கச்சா எண்ணெய் & இயற்கை எரிவாயு, ரசாயனம், மினரல் எண்ணெய்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டதே முக்கிய காரணம்.

உற்பத்தி துறை தயாரிப்புகளுக்கான பணவீக்கம் கடந்த அக்டோபரில் 12.04 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது, முந்தைய செப்டம்பரில் 11.41 சதவீதமாக காணப்பட்டது.

எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை அக்டோபரில் 37.18 சதவீத அதிகரிப்பைக் கண்டது. செப்டம்பரில் இவற்றுக்கான விலை அதிகரிப்பு விகிதமானது 24.81 சதவீதமாக காணப்பட்டது.

கச்சா பெட்ரோலியத்துக்கான பணவீக்கம் 71.86 சதவீதத்திலிருந்து 80.57 சதவீதமாக உயா்ந்தது.

அதேபோன்று, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் அக்டோபரில் (-) 1.69 சதவீதமாக இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.