ஆர்ப்பாட்டம் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெறும்…
ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி இன்று (16) பிற்பகல் நடைபெறவுள்ளது.
இதன்படி ,சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு பேரணிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
உரத் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்சியின் எதிர்ப்பு பேரணிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்படுவதை தடை செய்யுமாறு நீதிமன்றங்களில் பொலிஸ் நிலையங்கள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அநேகமான நீதவான் நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருமளவான மக்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை பிரதானி ஹரின் பெர்னாண்டோ, திட்டமிட்டவாறு பேரணி முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கையை தடுக்குமாறு கோரி பொலிஸார் சில நீதவான் நீதிமன்றங்களிடம் நேற்று (15) கோரிக்கை விடுத்தனர்.
மேலும் ,அநேகமான நீதவான் நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், சில நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கின.