மக்களுக்கு எந்தப் பக்கத்திலும் நிவாரணம் கிடைக்கவில்லை!
வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தப் பக்கத்திலும் நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசு தமது முதல் வரவு – செலவுத் திட்டத்திலேயே 800 பில்லியனை இல்லாமல் செய்தது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முதல் ஆரம்பம் இதுவே. எங்கள் நல்லாட்சி அரசில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கியதுடன் நாட்டின் வருமானத்தையும் அதிகரித்தோம். ஆனால், இந்த அரசு பெருமளவான வரிகளைக் குறைத்து வருமானத்தை இல்லாமல் செய்துள்ளது.
இதேவேளை, எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என்று அரசு இப்போதே ஏற்றுக்கொண்டுள்ளது. அரச நிறுவனங்களுக்குக் காலாண்டுக்கு நிதி ஒதுக்குவதாக கூறுவது வருமானத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதனையே காட்டுகின்றது.
நாட்டில் இப்போது டொலர் பிரச்சினை இருக்கின்றது. இதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு இல்லாமல் இருக்கின்றது. அத்துடன் கடனை எப்படிச் செலுத்தப் போகின்றோம் என்பதற்கான பதிலும் இல்லை. டொலரையும், வருமானத்தையும் அதிகரிக்க வேண்டுமாயின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஆனால், அதற்கான வேலைத்திட்டங்கள் இல்லை.
இவ்வாறான நிலைமையில் பாராளுமன்றத்துக்கு வராது மாலையில் ஊடகச் சந்திப்புகளை நடத்தி அரச சேவை சுமையானது என்று கூறுகின்றனர். இப்படி அரச சேவையைக் கேவலப்படுத்த வேண்டாம்.
நாங்கள் அரசாக இருந்தபோது அவர்களின் பெறுமதியை உணர்ந்து 10 ஆயிரம் ரூபாவால் சம்பளத்தை அதிகரித்தோம்.
இப்போது உரம் தொடர்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடவில்லை. இரசாயன உரத்தைத் தடை செய்தனர். அது தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவில்லை. சௌபாக்கிய நோக்குத் திட்டம் 10 வருடங்களைக் கொண்டது. ஆனால், உரத்துக்கான தடையை ஒரு வருடத்துக்குள் செய்துள்ளனர். இது பணம் இல்லாமையால் செய்த நடவடிக்கையாக இருக்கின்றது.
பல இடங்களில் விவசாயிகள் பயிர்ச்செய்கையை செய்யவில்லை. அவர்களுக்கு இரசாயன உரம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயத்துறை பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
முருந்தெட்டுவே ஆனந்த தேரரை இவர்கள் பல்கலைக்கழக வேந்தராக நியமித்தனர். ஆனால், அவர் இந்த வரவு – செலவுத் திட்டத்தை புடலங்காய் வரவு – செலவுத் திட்டம் என்று கூறியுள்ளார். அந்தளவுக்கு நிலைமை உள்ளது.
நாட்டில் தற்போது வரிசை முறை உருவாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் வரிசையே காணப்படுகின்றது. நாங்கள் அரசை ஒப்படைக்கும்போது 2000 பில்லியன் ரூபா வருவாயுடன் ஒப்படைத்தோம். ஆனால், இந்த அரசு 800 பில்லியன் ரூபாவை இல்லாமல் செய்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்தப் பக்கதிலாவது நிவாரணம் இருக்கின்றதா என்றால் எந்தப் பக்கத்திலும் கிடையாது. மருந்து விலைகள் நூறு வீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று பொருட்களின் விலைகள் தொடர்பிலும் கட்டுப்பாடுகள் இல்லை. வர்த்தக மாபியாக்களைப் பதவிகளுக்கு நியமித்தால் இவ்வாறுதான் நடக்கும். எங்களுக்கு இவற்றுக்கான பதிலே வேண்டும்” – என்றார்.